12 ஆம் எண்ணின் மகிமை

இறைவன் நமக்கு அளித்த தெய்வீக எண் 12

 12 என்ற எண் பொதுவாக தெய்வீக பெருமை பெற்ற எண்ணாகும்.  மேலும் 12 என்ற எண்ணின் உயர்விற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. அவற்றையும் அறிந்து கொள்வோம்.

மாதங்கள் 12. ரோமானிய மாபெரும் சக்ரவர்த்தியாக  விளங்கிய ஜூலியஸ் சீசர் நாட்களிலிருந்தே மாதங்கள் 12 என்று கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது.

ஜோதிடத்தை எடுத்துக் கொண்டால் நமது வாழ்க்கையின் இன்ப, துன்பங்களை நிர்ணயிக்கும் ராசிகளும் 12 தான்.  இந்த ராசிகளுக்குள் தான் மகத்தான பலம் பொருந்திய நவக்கிரகங்களும் அடங்கிஉள்ளனர்.

 

ஸ்ரீமண் நாராயணனின் அவதார சூட்சுமங்களை வெளிக்கொணர்ந்து பக்தி மார்க்கத்தை மக்களிடையே ஊட்டிய வைணவ அவதார புருஷர்களான ஆழ்வார்களும் 12.

நாயன்மார்கள் நமக்கு அளித்தருளிய சைவத் திருமுறைகளும் 12 தான்.

எந்த மந்திரமானாலும் அது நிரந்தரமாக பலன் அளிப்பதற்கு 12-ன் பெருக்குத்தொகையாகத்தான் சொல்ல வேண்டும் என மந்திர சாஸ்திரம் சொல்கிறது. இது 12 என்ற எண்ணின் தெய்வீகத்தைக் குறிக்கிறது. உதாரணமாக 12, 108, 1008 தடவை காயத்ரி மந்திரம் அல்லது கிரகண தோஷ நிவர்த்தி மந்திரம் போன்ற எந்த மந்திரமானாலும் அதை 12-ன் பெருக்குத் தொகையாக ஜெபித்தால் தான் பலன் கிடைக்கும்.  ஆதலால் 12 என்ற எண்ணிற்கு ஒரு தனி பெருமை உள்ளதை நம் புராதன நூல்களே உறுதி செய்துள்ளன.

அழகன் ஸ்ரீ ஆறுமுகப்பெருமாளின் திருக்கரங்கள் 12. அஞ்சேல் என்று அபயமாளித்தருளும் ஸ்ரீ முருகப் பெருமானின் திருக்கரங்களை                  “பன்னிருகையும் பவளச்செவ்வாயும்” என்று  போற்றி புகழ்கிறது ஸ்கந்த ஷஷ்டி கவசம்.

மனிதப்பிறவி எடுக்கும்ஒவ்வொருவரின் புண்ணிய பாவச் செயல்களைக் கண்காணித்து எழுதிவைத்துக் கொள்ள இறைவனால் படைக்கப்பட்ட தர்ம தேவதைகள் பன்னிரு சிரவணர்கள் என பூஜிக்கப்படும் தர்ம தேவதைகளாவர்.  நாம் செய்யும் ஒவ்வொரு சிறு புண்ணிய, பாவ காரியங்களைக்கூட தங்களது ஞான சக்தியினால் அறிந்து அவற்றிற்கு ஏற்ப பலன்களை அளிக்கும் பொறுப்பினை வகிக்கும் மகாபுருஷர்களும் 12 பேர் தான்.

பாரத புண்ணிய பூமியில் நடைபெறும் புகழ்வாய்ந்த திருவிழாக்களில் கும்பமேளா முக்கியமானது.  12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் கும்ப மேளா குருபகவான் 12 ராசிகளையும் ஒரு முறை பூர்த்தி செய்யும் கணக்கினை வைத்தே கொண்டாடப்படுகிறது.  திருக்குடந்தையில் உள்ள மகாமக திருக்குளத்தில் கொண்டாடப்படும் மகாமகம் வைபவமும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் அமைகிறது.

கோயில்களில் நடைபெறும் கும்பாபிஷேக வைபவமும் 12 ஆண்டுகளுக்கொரு முறைதான் அமைகிறது.

மலர்களில்  தனிச் சிறப்பு வாய்ந்தது குறிஞ்சிமலர்.  இம்மலர் கொண்டு குமரப்பெருமானை பூஜிப்பது மகத்தான புண்ணிய பலனை அளிக்கும் எனப் புராதன நூல்கள் கூறுகின்றன.  இந்த அரிய மலர் மலர்வதும்  12 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான்.

இவ்விதம் எண் 12இன் பெருமையை சொல்லிக்கொண்டே போகலாம்.  இத்தகைய எண்ணில் நம் சமூகத்திற்கு பெயர் தருவதற்காகவே இறைவன் பொன்னிடும் பாறையில் தோன்றி பாக கணக்கை பன்னிரெண்டு பங்காகப் பகிர்ந்து பார்க்க கூறி தன்னை பன்னிரெண்டாவது பங்காளியாக ஆக்கிக்கொண்டு நமக்கு  இந்த தெய்வீக எண்ணில் பெயர் வரும்படி அருள் செய்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *